வவ்வால்களை நேசிக்கும் கிராமம்!!

சனி நவம்பர் 14, 2020

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கொளதாசபுரம் என்ற கிராமம் உள்ளது.

அங்கு சுமார் 500 பேர் வசித்து வருகிறார்கள்.

கிராமத்தின் மைய பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதன் கரையோரத்தில் மா மரங்கள் உள்ளன.

இதில் நூற்றுக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. வவ்வால்கள் இருப்பதால்தான் தங்களது கிராமம் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதாக கருதும் கொளதாசபுரம் மக்கள், வெகுகாலமாக வவ்வால்களை துன்புறுத்தாமல் நேசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வவ்வால்களும் கிராமத்திற்குள் சென்று மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதில்லை.

இப்படி மனிதர்களுக்கும்-வவ்வால்களுக்கும் ஏற்பட்ட நெருக்கத்தின் பலனாக தீபாவளி நாட்களில் கொளதாசபுரம் கிராம மக்கள் வவ்வால்களை பயமுறுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பதில்லை.

மேலும் வவ்வால்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதற்காக, மா மரங்களில் ஏறி மாங்கனிகளையும் பறிப்பதில்லை.

மேலும் அதே மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் வனப்பகுதியையொட்டி உள்ள உரிகம், தொட்டமஞ்சி போன்ற கிராம மக்களும் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறார்கள்.

வன விலங்குகள் மிரண்டு ஓடும் என்பதால் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து எளிமையாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.