யாழ். மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்ட விவசாய உபகரணங்கள் தரமற்றவை

திங்கள் ஜூலை 13, 2020

யாழ். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் தரமற்ற விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டமையால் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டில் 134 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாயத்துறைக்கான மானியங்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் விவசாயப் பிரிவினால் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட விவசாய உபகரணங்கள் மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் இயங்கும் சில வர்த்தக நிறுவனங்கள் இந்த மானியத்திட்டத்தைப் பயன்படுத்தி தரம் குறைந்த பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் அற்ற இயந்திரங்களை விவசாயிகளின் தலையில் கட்டியிருக்கிறார்கள். 

குறிப்பாக, யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்துள்ள வர்தா என்டபிறைசஸ், கிளிநொச்சியில் அமைந்துள்ள பிள்ளையார் ஹாட்வெயர் போன்றவை இந்த திரைமறைவு வேலைகள் மூலம் கோடிகளில் இலாபம் சம்பாதித்து இருக்கிறார்கள். 

இவ்வாறான இயந்திரங்களால் விபத்துக்கள் ஏற்பட்ட போதும், கொள்வனவு செய்து ஆறே மாதத்தில் இந்த இயந்திரங்கள் செயற்பட மறுத்தபோதும் விவசாயிகள் உரிய அதிகாரியிடம் முறையிட்டும் ஏதும் நடைபெறவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

எமது சமூகத்தில் விவசாயிகளும் சுயதொழில் முனைவோரும் மூன்றாம் தரப் பிரஜைகளாகவே நடாத்தப்படுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

இந்த நிலையில் மாற்றம் வேண்டும் எனின் விவசாய இயந்திரங்களின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான விழிப்புணர்வு சகல மட்டங்களிலும் பரவலாக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தரமற்ற இயந்திரங்களை விற்பனைசெய்யும் நிறுவனங்கள் மானியத் திட்டங்களில் பங்கேற்காவண்ணம் கறுப்புப் பட்டியலிடவேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

குளிரூட்டிய அறைகளில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு எமது குரல்கள் கேட்குமா? அல்லும் பகலும் உழைப்பை உரமாக்கிப் பாடுபடும் எம்மால் உயர்மட்ட முடிவுகளில் மாற்றங்களை கொண்டுவர முடியுமா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.