யாழ். மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பெரும்போக நெற்செய்கையாளர்கள் பாதிப்பு!

சனி சனவரி 18, 2020

பெரும்போகத்திற்கான அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதனால் விவசாயிகள் மீண்டும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

பெரும்போக செய்கைக்கான நெல் விதைப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்டத்தில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில் பெரும்பாலான வயல் நிலங்கள் இதனால் அழிவடைந்தன.தற்போது நெல் அறுவடை இடம்பெறுகின்ற நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அங்கு மழை பெய்து வருகின்றது.

இதனால் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்துள்ளதுடன் , அறுவடை செய்யப்படாத விளை நிலங்களிலும் நீர் நிரம்பியுள்ளது.இந்நிலையில் நெல்லை உலர வைப்பதற்கான வசதிகள் இல்லாமையினால் விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை, நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமையால் மட்டக்களப்பு விவசாயிகளும் பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.இவ்வாறான நிலையில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் நெல் உற்பத்தியை மேற்கொண்டுள்ள தமக்கு நியாயமான விலையை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.