யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் நியமனம்!!

திங்கள் அக்டோபர் 14, 2019

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டம் கடந்த 10 ஆம்  திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பேராசிரியர்களான எஸ். சிறிசற்குணராஜா, கே. மிகுந்தன் ஆகியோரின் பெயர்களை யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் பதவிக்காக முன்மொழிந்து, அவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட இருவரில் ஒருவரான பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்திருக்கின்றனர். 

இந்தத் தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி, வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான இரண்டாவது கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைத்தது.        c