யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபர் வேதநாதன் பழிவாங்கப்படுகின்றார்

வெள்ளி ஜூலை 03, 2020

யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபர் நா.வேதநாதன் ஓய்வுபெற்ற பின்னரும் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் என மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவர் ஓய்வூதியம் பெறுவதற்கான கோவைகள் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பவிடாமல் அரசியல்வாதி ஒருவர் தடுத்து வருகின்றார் என தெரியவருகின்றது. 

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளராக பணியாற்றிய நா.வேதநாதன் கடந்த 2019 மே மாதம் 23 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் செல்லவிருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை இலக்காக்கொண்டு அரசியல்வாதி ஒருவரின் தூண்டுதலின் பெயரில் கடந்த 2019 பெப்ரவரி மாதம் அவசரமாக இடமாற்றம் வழங்கப்பட்டது.

ஓய்வுக்கு மூன்று மாதங்கள்கூட இல்லாத நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்டதால் மன விரக்தியடைந்த அவர் மூன்று மாதங்களுக்கான விடுமுறையை சமர்ப்பித்துவிட்டு ஓய்வுபெற்றார். 

எனினும் அவர் ஓய்வுதீயம் பெறுவதற்கான கோவைகளை ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பக்கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்க அரசியல்வாதி ஒருவர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றார். 

குறித்த அரசியல்வாதியின் ஏற்பாட்டில், முன்னாள் மாவட்டச் செயலாளர் மீது விசாரணை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அவர் பணியில் இருந்தபோது தவறிழைத்த அதிகாரிகளை தண்டித்தார் என்பதை வைத்து பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை ஒன்று நடைபெற்ற போதிலும் அவர் மீத தவறு இனம்காணப்படவில்லை. 

இந்த விசாரணக்குழுவின் பின்னணியிலும் குறித்த அரசியல்வாதியின் கை ஓங்கியிருந்தமை வெளிப்பட்டுள்ளது. 

ஒரு விசாரணைக்குழுவின் அறிக்கை முன்னாள் அரச அதிபர் வேதநாதனுக்கு நற்பெயரைப் பெற்றுக்கொடுத்துள்ளதால் அவர் மீது வேறேதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விசாரணைக் குழவை நியமிக்கலாமா என குறித்த அரசியல்வாதி தரப்பு ஆராய்ந்து வருகின்றது எனவும் கூறப்படுகின்றது. 

இதனாலேயே அவரது ஓய்வூதியக் கோவையை ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பவிடாமல் குறித்த அரசியல்வாதி தடை போட்டு வருகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.