யாழ்.பல்கலையில் வேலை:குழப்புவது யார்?

புதன் ஜூன் 19, 2019

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய திட்டமிட்டு தவறான செய்திகளை சில தரப்புக்கள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு  உயர்கல்வி அமைச்சிலிருந்து பெயர்ப் பட்டியல்கள்  அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பதிவு செய்த பலர் தமது பெயர் இடம்பெறாமையை தமக்கு தெரியப்படுத்தியதாக ஊழியர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறான 225 பேர் வரையானோர் இன்று மட்டும் எமக்கு புகார் இட்டுள்ளனர்.இவர்களுக்கு இது குறித்து உயர்கல்வி அமைச்சருக்கு புகாரிடுமாறும்,பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் வழங்குமாறும் நாம் ஆலோசனை கூறியுள்ளோம்.இது போன்றதொரு புகார் கடிதத்தை தமது பெயரை சிபாரிசு செய்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம்.இவ்வாறு புகாரிடுவதற்கு அவர்களுக்கு தேவைப்பட்ட உதவிகளை வழங்கினோமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே பதிவு செய்த பலர் புறக்கணிக்கப்பட ,சில பதவி நிலைகளுக்கான பட்டியலில் குறிப்பாக ஆய்வுகூட உதவியாளர்,வேலை உதவியாளர் என்பவற்றிற்கு 40விழுக்காட்டிற்கும் அதிகமாக ஒரு இனக்குழுமத்தினை சேர்ந்தவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்போதைய உயர்கல்வி அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் விளக்கமான தெளிவு படுத்தலை வழங்க வேணாடியது இனங்களுக்கிடையான நல்லுறவுக்கு அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறிப்பாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கவனம் செலுத்தவேண்டுமெனவும் இதேவேளை வரும் வெள்ளிக்கிழமை ஆய்வுகூட உதவியாளருக்கான தெரிவுப் பரீட்சைகள் ஆரம்பமாகவிருப்பதால் பாதிககப்பட்டோருக்கான நிவாரணத்துக்கான கால அவகாசம் குறைவாக உள்ளதாகவும் அத்தரப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளன.