யாழ்ப்பாண இராச்சியத்தை வீழ்த்திய ஆறாம் பராக்கிரமபாகுவிற்கு நல்லூரில் சிலை – பௌத்த தேரர்களிடம் சஜித் வாக்குறுதி!

வியாழன் நவம்பர் 14, 2019

யாழ்ப்பாண இராச்சியத்தை வீழ்த்தி சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் முழுத் தீவையும் கொண்டு வந்த ஆறாம் பராக்கிரமபாகுவிற்கு நல்லூரில் சிலை வைக்கப் போவதாக பௌத்த தேரர்களிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா வாக்குறுதி அளித்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தேர்தல் பரப்புரைகளுக்கான காலக்கெடு புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதற்கு முன்னர் பௌத்த தேரர்களுடன் நடாத்தப்பட்ட சந்திப்பொன்றிலேயே இவ்வாறு சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

இன்றைய வடமராட்சி வல்லிபுரம் பகுதியை அண்டியிருந்த சிங்கை நகரைத் தலைநகராகக் கொண்டு இயங்கிய தமிழர்களின் அரசாகிய யாழ்ப்பாண இராச்சியம், தென்மேற்கே நீர்கொழும்பையும், தெற்கே அனுராதபுரத்தையும், தென்கிழக்கே கதிர்காமத்தையும் தனது எல்லைகளாகக் கொண்டிருந்தது.

இன்றைய தமிழீழ தாயகம் முழுவதையும் அன்று யாழ்ப்பாண இராச்சியம் என்ற பெயரில் ஆரியச்சக்கரவர்த்திகள் என்ற அரச வம்சத்தைச் சேர்ந்த தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள்.

இவ்வாறு இறைமையுடன் விளங்கிய தமிழர் இராச்சியத்தை கனகசூரிய சிங்கை ஆரியன் என்ற தமிழ் மன்னன் ஆட்சி செய்த பொழுது, செண்பகப் பெருமாள் என்ற கேரளப் பூர்வீகத்தைக் கொண்ட தனது வளர்ப்பு மகனின் தலைமையில் பெரும் கூலிப்பட்டாளம் ஒன்றை அனுப்பி 1450ஆம் ஆண்டில் ஆறாம் பராக்கிரமபாகு என்ற சிங்கள மன்னன் கைப்பற்றினான்.

அன்று வல்லிபுரத்தில் இயங்கிய யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரான சிங்கை நகர், ஆறாம் பராக்கிரமபாகுவின் உத்தரவிற்கு அமைய செண்பகப் பெருமாளால் நிர்மூலமாக்கப்பட்டு, பின்னர் சிங்கள இறையாட்சிக்கு உட்பட யாழ்ப்பாணச் சிற்றரசின் தலைநகர் நல்லூரில் நிறுவப்பட்டது.

எனினும் பதினேழு ஆண்டுகள் கழித்துத் தமிழ் நாட்டிலிருந்து பெரும் படையோடு யாழ்ப்பாண மண்ணில் கால்பதித்த கனகசூரிய சிங்கை ஆரியன், யாழ்ப்பாண இராச்சியத்தை முழுவதுமாக மீட்டெடுத்து, மீண்டும் தமிழீழ தாயகமெங்கும் தமிழர்களின் இறைமையை நிலைநாட்டினார்.

இந் நிலையில் சிங்கள ஆதிக்கத்தின் குறியீடாக நல்லூரில் ஆறாம் பராக்கிரமபாகுவிற்கு சிலை வைப்பதற்கு சஜித் பிரேமதாசா முடிவு செய்திருப்பது மானமுள்ள தமிழர்களை கடும் சீற்றமடைய வைத்துள்ளது.

எனினும் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரிலும், தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையிலும் தமிழீழ தாயகத்தை பௌத்த – சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் சஜித் பிரேமதாசா, அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளுக்கான காலக்கெடு நிறைவடையும் தறுவாயில் இந்த வாக்குறுதியை வழங்கியிருப்பது ஆச்சரியப்படக் கூடிய ஒன்றல்ல என்று தமிழ்த் தேசிய அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.