யார் பெத்த பிள்ளைகளோ!

ஆறடிக் கிடங்குகள் வரிசையாய்
வானம் பார்த்துக் கிடக்கும்.
அருகினில் கும்பியாய்
புழுதிச் செம்மண் மூடக் காத்திருக்கும்.
வரிசையாய் பிள்ளைகள் வருவார்கள்.
வீதிகள் முகாரி பாடும்.
😢 🌺 😢 🌱 😢
"யார் பெத்த பிள்ளைகளோ" என்று
ஏங்குவாள் ஒரு தாய்.
"வாழவேண்டிய இளந்தாரியள்”
என்று மூச்செறிவார் ஒரு தந்தை.
சந்தணப் பேழைகள் சுமந்த வண்டி
சனங்களோடு சனங்களாய் நகரும்.
கொடி போர்த்திய வண்டியின் பின்னே
துப்பாக்கிகளோடு இறுகிப் போயிருப்பார்கள்
நளைய மாவீரர்கள்.
😢 🌺 😢 🌱 😢
சாம்பிராணி வாசம் தெருக்களில் பூக்கும்.
மூடிய பெட்டிக்குள்
யாரோ ஒரு குடும்பத்தின் விழுது
நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடக்கும்.
இளம் பிள்ளைகளின்
சாவுகளுக்குப் பழக்கப்பட்ட நாடு,
தன்னை நிமிர்த்திக் கொண்டு மௌனமாய் கடக்கும் .
😢 🌺 😢 🌱 😢
உங்களைப் பற்றிச் சொல்லி முடிப்பான் ஒரு தோழன்.
நீங்கள் சேமித்து வைத்த உறவுகள்
அந்தச் சொற்களில் உடைந்தழும்.
ஊருக்குத் தெரியுமா?
வீட்டுக்குத் தெரியுமா?
என்று ஒரு முகம் முணுமுணுக்கும்.
காடுகள் தாண்டி, ஆறுகள் தாண்டி, வந்த
உங்கள் பாதங்களில் பூக்கள் நிறையும்.
வரியுடன் களத்தின் முகம் கறுத்துக் கிடக்கும்.
நீங்கள் மட்டுமே அறிந்த ஒருத்தி
எல்லோரிலும் கூடுதலாய் கரைந்து கதறுவாள்.
😢 🌺 😢 🌱 😢
பெட்டி மூடி உங்களைத் தோளில் சுமப்பார்கள்
ஒன்றாய் சாப்பிட்ட உங்கள் தோழர்கள்.
துயிலுமில்லம் உங்களுக்காய் காத்திருக்கும்.
கடைசியாய் உங்கள் முகம் வான் பார்க்கும்.
பிரியங்கள் நெருப்பாயுருகி வழியும்.
ஈரம் ஒளித்த எல்லாக் கல்நெஞ்சும்
தோற்றுக் கசியும் நிமிடம் அது.
😢 🌺 😢 🌱 😢
உங்களுக்கான மரியாதை வேட்டுக்கள் வான் பாயும்.
விதைகுழி உங்களைக் கையேந்தும்.
கயிற்றை மெல்ல மெல்ல கைவிடும்
உங்கள் நண்பர்களின் இமைகளும் கரையும்.
உயிரெரிக்கும் பாடல் உருகியுருகி காற்றேறும்.
ஓவென்று உடைந்தழும் பெண் கண்ணீர்களால்
கல்லறை வெளியில் சோகம் படரும்.
😢 🌺 😢 🌱 😢
உரித்துடையோரை முன்னுக்கு அழைப்பர்.
“எல்லோரும் தானே உரித்துடையோம்” என்ற
சனங்களின் குரல் மௌனமாய் வரிசையாகும்.
பிடிமண் ஒவ்வொன்றாய் குழி வீழும்.
புழுதியெழுப்பும் உங்கள் விதைகுழியின் மீது
எல்லோரது தீராப் பெருமூச்சும் படரும்.
பார்த்துக் கொண்டிருக்க நீங்கள் விதைந்து போவீர்கள்.
இறுதியாய் மண் வாரி உங்களை மூடுவர் தோழர்கள்.
ஒரு குழந்தை உறங்குவதைப் போல
உங்களை மண்ணால் போர்த்தி விடுவார்கள்.
😢 🌺 😢 🌱 😢
போக மனமின்றி எல்லோரும்
திரும்பித் திரும்பி உங்களையே பார்த்து நடப்பர்.
மாலையும், ஊதுபத்தியுமாய் நீங்கள் மௌனமாக இருப்பீர்கள்.
பக்கத்துக் கல்லறை உங்களுக்குத் துணையாயிருக்கும்.
நாளை இன்னொரு தோழனோடு வருவார்கள் சனங்கள்.
விழிகளால் நீர் பாய்ச்சி விதைத்துக் கொண்டேயிருந்தது நாடு.
நாங்கள் பிடிமண்ணிட்டுக் கொண்டேயிருந்த
பாவியர்களாய் இருந்தோம்.
பருவத்துப் பயிர்களை பாதியில் புதைக்கிற
சோகத்தால் இறுகினோம்.
உங்கள் கனவுகள் ஈடேறுதலே
நம் நித்திய நிம்மதியென்றெண்ணினோம்.
😢 🌺 😢 🌱 😢
அந்த நாளை தேடித் தேடியே
ஞாபகங்களால் எரிகிறது நம் வாழ்வு.
ஆனைக்கொரு காலமெனில் பூனைக்கொரு காலம் வரும்
என்கிற பழமொழியோடு பார்த்திருக்கிறோம்.
யார் யாரோ பெத்த நம் குஞ்சுகளே !
பார்ப்போம்.
ஒரு காலம் வராமலா போகும்?
😢 🌺 😢 🌱 😢
- தீபிகா -
26.11.2019
06.31 காலை.