யாரிடமிருந்து தமிழ் மக்களை கடவுள் காப்பாற்ற வேண்டும்.....?

திங்கள் ஜூலை 01, 2019

தமிழ் மொழிப் பரீட்சையில் சந்தர்ப்பம் கூறுக என்றொரு வினா முறைமை உண்டு.

மகாபாரதம்,இராமாயணம் போன்ற இதி காசங்களில் இருந்து கூற்று அல்லது பாடலைத் தந்து இஃது யாரால்?யாருக்கு?எச்சந்தர்ப்பத்தில்? கூறப்பட்டது என்பதாக அந்தக் கேள்வி அமையும்.

குறித்த பாடப்பரப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்  என்பதற்காக அப்படி யயாரு வினா கேட்கப்படுவது வழக்கம்.

நம் அரசியலிலும் இவ்வாறான வினாக்களைக் கேட்டால்,அதற்குக் கிடைக்கின்ற விடை;மக்கள் மறந்துவிட்டார்கள் இனி நாம் புரட்டிக் கதைக்கலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளுக்குத்தக்க பாடம் புகட்டும்.

இருந்தும் யார் அந்தப் பணியைச் செய்யப் போகிறார்கள். வேண்டுமானால் பொறுப்புள்ள இணையங்கள் சந்தர்ப்பம் கூறுக என்றொரு அரசியல் பகுதியை அறிமுகப்படுத்தி எம்மக்களுக்கு ஞாபகமூட்டலைச் செய்யலாம்.

அப்படியான ஒரு செயற்பாடாக இதனை உதாரணப்படுத்துகிறோம்.
தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

இந்தக் கூற்று யாரால்,யாருக்கு,எச்சந் தர்ப்பத்தில் கூறப்பட்டது என்று வினா எழுப்பினால்,யாரால் என்ற கேள்விக்கு அனைவரும் சொல்லக்கூடிய பதில் தந்தை செல்வநாயகம் என்பதாகும்.

யாருக்குக் கூறப்பட்டது என்பதற்கான விடை பொதுவானதாக அமையும்.மாறாக எச்சந் தர்ப்பத்தில் கூறப்பட்டது என்று கேட்கும் போது தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும்.

தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய தந்தை செல்வநாயகம் எந்தச் சந்தர்ப்பத்தில் அதைக் கூறினார் என்று ஆராயும்போதுதான்;அவர் தனது கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் போக்கினால் வெறுப்படைந்த சந்தர்ப்பத்திலேயே தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாக அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் தெரிவிப்பார்கள்.

ஆக,தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வநாயகம் கூறிய சந்தர்ப்பத்தை அறியும்போதுதான் அவர் கூறிய கருத்தின் மெய்ப்பொருளும் உள்ளார்ந்தமும் தெரியவருகிறது.

எனவே தமிழ் மக்களை முதலில்,ஏமாற்றுத் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்றியாக வேண்டும்.

அதிலும் தேர்தல் அரசியலைமையப்படுத்தி தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகள் செய்கின்ற திருகுதாளம் கொஞ்சமல்ல.

எனவே தமிழ் மக்கள் விழிப்பாக இருந்து,தங்களை ஏமாற்றுகின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம் அகப்படாமல் தப்பித்துக் கொள்ள வேண்டும்.

அதுவே நம் தமிழ் இனம் மீட்சி பெறுவதற்கான அடிப்படையாகும்.

நன்றி வலம்புரி