யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்

திங்கள் செப்டம்பர் 28, 2020

33 ஆண்டுகளானாலும் முடிவில்லாத நினைவோடு முகங்களை மூடியவாறு 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கையில் மலர்களுடனும் தீபத்துடனும் அணிவகுத்து வரிசையாக நிற்க, தியாகதீபம் திலீபனின் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, அவரின் இறுதி நாட்களை நினைவுபடுத்தும் பாடல்கள் ஒலிக்க, உணர்வோடு வணக்க நிகழ்வு ஆரம்பித்தது.

26.09.2020 பீலபெல்ட் நகரில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழாவை வடமாநிலத்தில் அமைந்துள்ள தமிழாலயங்கள் இணைந்து சிறப்பாகக் கொண்டாடின. அவ் விழாவின் ஆரம்பத்துக்கு முன்னர் விழர்வுக்கு வருகை தந்திருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பணியாளர்கள் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். அதேவேளையில் ஏனைய நான்கு மாநிலங்களிலும் அமைந்துள்ள 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் கற்பித்தல் ஆரம்பமாவதற்கு முன்னர் நிர்வாகத்தினரின் சிறப்பான ஏற்பாட்டுடன் தியாகி திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு, தமது உணர்வைப் பகிர்ந்து கொண்டனர். மருத்துவபீட மாணவனாக இருந்த திலீபன் அவர்கள் ஏன் இப்படியான ஒரு முடிவை எடுத்தார் என்பது வரையான வரலாறு யேர்மனியில் வாழும் சிறார்களிடம் விதைக்கப்பட்டுள்ளது.

வணக்க நிகழ்வைத் தொடர்ந்து 11.30 மணியளவில் திட்டமிட்டவாறு தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா ஆரம்பமாகியது. பீலபெல்ட் நகரின் சுகாதார மையத்தின் ஆலோசனைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் அமைவாக தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் எல்லாவகையான பாதுகாப்புகளும் செய்யப்பட்டதுடன், சுகாதார அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் விசேடமாக அழைக்கப்பட்டு, அவர்களின் ஆய்வுகளின் அனுமதியின் அடிப்படையில் விழா ஆரம்பமாகியது.

வாகை சூடிய மாணவர்களையும் வளப்படுத்திய ஆசான்களையும் வரவேற்று மண்டபத்துக்குள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பிக்கப்பட்டது. விழாவில் வழமை போன்று தமிழ்த்திறன், கலைத்திறன், பொதுத்தேர்வு போன்ற விடயங்களில் நாடு தழுவிய மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் 5,10,15 ஆண்டுகள் பணியாற்றும் ஆசான்களும் மதிப்பளிக்கப்பட்டனர். 20,25,30 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தமிழ்வாரிதி, தமிழ்மாணி ஆகிய மதிப்பளிப்புகளும் வழங்கப்பட்டன. நாடு மற்றும்; மாநிலம் தழுவிய மட்டத்தில் சிறந்த தமிழாலயங்களும் இவ்வரங்கில் தமது சிறப்பான பணிக்கான மதிப்பைப் பெற்றுக் கொண்டன.

விழாவின் நிறைவில் 12ஆம் ஆண்டுவரை தமிழாலயங்களில் கல்வி பயின்று, வெளியேறும் மாணவர்களுக்கான சிறப்பான மதிப்பளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. இதுவரை காலமும் அந் நிகழ்வை நெறிப்படுத்தி மதிப்பளித்து வந்த பேராசிரியர்கள் திரு.திருமதி. சண்முகதாஸ் அவர்களின் போக்குவரத்து இடையூறினால் அப்பணியை தமிழ்மாணியும் தமிழ்ப் பட்டயக் கற்கை நெறியின் மூத்த பட்டதாரியுமான திருமதி. கனகேஸ்வரி சந்திரபாலன் அவர்கள் மதிப்பளித்து வைத்தார்.

இன்றைய சூழலில் பல்வகையான நோய்த்தொற்று ஐயங்கள் இருந்த போதிலும் விழாவோடு தொடர்புடைய அனைவரும் வருகை தந்து, தமது பங்களிப்பைச் செலுத்தியது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும்.

விழாவில் மொத்தமாக 400க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட போதிலும் ஒரே நேரத்தில் 150 பேருக்கு மேற்படாது வகுத்து, பிரித்து, நிர்வகிக்கப்பட்டதும் அதற்கான பாராட்டை பீலபெல்ட் சுகாதார அலுவலகம் கூறியதும் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாக மரபுகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.