யாழ்ப்பாணம், நல்லூரடியில் இருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையானது அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. அநுர அரசும், இலங்கை தமிழரசு கட்சியும் இணைந்து இதனை அரங்கேற்றியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நேற்று (26) சனிக்கிழமை எழுச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரவு இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விதமான முன்னறிவித்தலும் எமக்கு வழங்காமல் 15க்கும் மேற்பட்ட பொலிஸார் வாகனங்களில் வந்து, சப்பாத்து கால்களுடன் உள்ளே சென்று பலவந்தமாக அந்த சிலையை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதன்மூலம் அனுர அரசின் கொடூர முகம் வெளிப்பட்டுள்ளது. அநுர  அரசாங்கமானது தேர்தல் பிரச்சாரங்களின் போது மேடைகளில், "நினைவேந்தல்களை அனுமதிப்போம், தாங்கள் சிலைகளை நிறுவுவோம்" என்ன அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட்டவர்கள் கூறினார்கள். 

இவ்வாறு பொய்களை கூறி வாக்குகளை பெற்று பின்னர் தமிழ் மக்களின் குரல்வளைகளை ஒவ்வொன்று ஒவ்வொன்றாக நசுகின்றார்கள். மகிந்த, கோட்டா போன்றோரின் இனவெறி மனப்பான்மையுடன் அனுர அரசும் உள்ளது. இந்த திருவுருவத்திலே அகத்தியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இந்த அனுர அரசு அவமானப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அனுரவினால் ஒருபோதும் தமிழ் சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. அவரைக் கோழைத்தனமான ஆட்சியாளராகவே நான் கருதுகிறேன். எமது இரத்தத்தோடும், உணர்வோடும் சம்மந்தப்பட்ட விடயங்களோடு அவர் விளையாடுகின்றார். இன நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காகவே இதனை செய்கின்றார். அனுர குமார திசாநாயக்க நேரடியாக தமிழர்களிடம் இந்த விடயத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த விடயத்திற்கு பின்பாக சி.வி.கே.சிவஞானம் இருக்கின்றார் என்பதனையும் நாங்கள் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம். நிலைவேந்தலின்போது ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பான பிரச்சினை எழுந்தது. ஒலிபெருக்கியை பயன்படுத்த, அந்த காணி உறுதி உள்ளவர்கள் ஊடாக அனுமதி பெறுமாறு பொலிஸாரால் கூறப்பட்டது. 

இந்நிலையில் எமது உறுப்பினர்கள் ஊடாக யாழ்ப்பாண மாநகர சபையிடம் கடிதத்தினை கோரினோம். ஆனால் கடிதம் தரவில்லை. இந்த விடயத்தில் தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்று தமது கட்சி தலைமை கூறியதாக மேயர் கூறினார். அதன்பின்னர் சி.வி.கே.சிவஞானத்துடன் நாங்கள் பேசிய போது அவர் மிகவும் காட்டமாக என்னுடன் பேசினார். யாரைக் கேட்டு இந்த சிலையை வைத்தீர்கள்? 26ஆம் திகதியோடு இந்த சிலையை எடுக்காவிட்டால் நான் இந்த சிலையை அகற்றுவேன் என்று கடும் தொனியில் கூறினார்.

இவர் இவ்வளவு கீழ்த்தரமான செயற்பாட்டை செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பொலிஸாரின் கைக்கூலிகளாக தமிழரசு கட்சி செயற்பட்டுள்ளது என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகிறேன். தமிழரசு கட்சியின் செயற்பாட்டிற்கு பொறுப்பேற்க வேண்டும். தமிழரசு கட்சியும் அநுர அரசாங்கமும் இணைந்து தான் இந்த சதியை செய்துள்ளது என்பதனை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இது தொடர்பாக வினவுவதற்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை தொடர்பு கொண்டும் அவரிடமிருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை.