கோவை பெரியார் நூலகத்தைத் தொடர்ந்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் புத்தகங்கள் கொள்முதலில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கோவையில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் நூலகம் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக அந்த நூலகம் திறக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த அக்டோபர் 13-ம் தேதி முதல்வர் விஜய் கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தைத் திறந்து வைத்தார். இந்நிலையில் பெரியார் நூலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு எழுப்பினார்.
இதுதொடர்பாக அவர் வெளியி்ட்ட கட்டுரையில், “போலி பதிப்பகம், போலி சர்வதேச தர புத்தக எண்கள் (ஐஎஸ்பிஎன்) கொண்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதிலும் அகல் விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்கள்தான் அதிகமாக உள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார்.
கொள்முதல் விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியான திமுகவும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். நூல்கள் கொள்முதல் தொடர்பாக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.