2027 வரவு, செலவுத் திட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட கல்வித் துறைப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இம்மாதம் 30 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.

2027 வரவு ,செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட கல்வித் துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புறக்கணித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப்பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை. அதற்கமைய, எதிர்வரும் 30 ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகவீன விடுமுறையின் கீழ் ஒரு நாள் அடையாள தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 250,000 ஆசிரியர்களும், 10,110 பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இத்தொழிற்சங்க நடவடிக்கையில் இணைவார்கள் என எதிர்பார்க்கின்றோம். கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மேலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

வரவு, செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வித் துறை புறக்கணிக்கப்பட்டிருப்பதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். இப்பிரச்சினைகளை நாம் பல சந்தர்ப்பங்களில் முன்வைத்துள்ளோம். கல்வி தொடர்பான விசேட விவாதம் அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. அந்த விவாதத்தின் போது இவ்விடயங்கள் குறித்து ஒரு தீர்மானம் எட்டப்பட வேண்டும்.

ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எந்தவொரு வேலைத்திட்டமும் நடைமுறையில் இல்லை. இத்தகைய சூழ்நிலையிலேயே 30 ஆம் திகதி ஒரு நாள் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

தற்போது கல்வித் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை நாடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்றார்.