அநுராதபுர புனித பூமி அபிவிருத்திப் பணிகளை எதிர்த்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அரசியல் சுயலாபத்திற்காக சோடிக்கப்பட்ட பொய்யான நாடகங்கள் என்றும், எவர் வந்து போராட்டம் நடத்தினாலும் அநுராதபுரத்தின் அபிவிருத்திப் பணிகள் ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டது என்று வர்த்தக, வாணிப, உணவு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னர் விஹாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் இவ்வாறானதொரு நாடகத்தை அரங்கேற்றி, இறுதியில் ஹோட்டலில் முடிவுறுத்தப்பட்ட சம்பவத்தைப் போல, தற்போது அரசியல் ரீதியாக நிலைத்து நிற்க வேறு வழியில்லாத சிலர் அநுராதபுரத்திலும் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு ஏதேனும் ஒரு தலைப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
இருப்பினும், இவ்வாறான போராட்டங்களால் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை முடக்க முடியாது, அநுராதபுர புனித பூமியின் அபிவிருத்திப் பணிகள் நிச்சயமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அநுராதபுர புனித நகர அபிவிருத்திப் பணிகளானது அட்டமஸ்தானாதிபதி, ருவன்வெலிசாய நாயக்க தேரர் உட்பட அட்டமஸ்தானத்திற்குட்பட்ட அனைத்துக் தலைமைப் பிக்குகளின் நேரடித் தலையீடு மற்றும் பங்கேற்புடன் அமைக்கப்பட்டுள்ள புனித பூமி அபிவிருத்திக் குழுவின் முழுமையான கண்காணிப்பு மற்றும் அவதானிப்பின் கீழேயே நடத்தப்படுகின்றது.
இதற்காக ஒரு சிறப்பு ஆலோசனைக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் முழுமையான புரிதல், வழிகாட்டல் மற்றும் ஆசீர்வாதத்துடனேயே நாட்டின் புராதனத் தன்மை, கௌரவம், பெருமை மற்றும் பௌத்த சாசன விழுமியங்கள் அனைத்தையும் பாதுகாத்து, அவற்றை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், அளுத் நுவர பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள அகழ்வாராய்ச்சிகளின் மூலம், இலங்கையில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமைவாய்ந்த மாபெரும் நாகரிகம் நிலவியதற்கான வரலாற்றுச் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இப் பகுதியில் மேலும் விரிவான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு, இலங்கை ஒரு பிரம்மாண்டமான வரலாற்று நாகரிகத்தைக் கொண்ட நாடு என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அநுராதபுரத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அநுராதபுரத்தின் பெருமைமிக்க வரலாற்றையும், அளுத் நுவரவில் உள்ள தொன்மையான நாகரிகத்தையும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
அநுராதபுரத்தின் வரலாற்று கம்பீரத்தையும் கௌரவத்தையும் மேலும் உயர்த்தும் வகையிலேயே இந்த அபிவிருத்திகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, அரசியல் ரீதியாக வாழ்வாதாரமோ அல்லது நிலைப்பாமோ இல்லாதவர்கள் எதனை மார்க்கமாகக் கொண்டு பிரசாரம் செய்தாலும், மதத் தலைவர்கள், அட்டமஸ்தானாதிபதி மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆசீர்வாதத்துடன் அநுராதபுரத்தின் அபிவிருத்திப் பணிகள் உறுதியாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்றார்.