தித்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள கட்டியெழுப்புவதற்காக பாரியளவில் நன்கொடைகள் கிடைத்தாலும் அரசாங்கம் 700 பில்லியன் ரூபா வரை நிதி ஒதுக்கியிருந்தாலும் அதனை இந்த விடயங்களுக்காக பயன்படுத்தாத நிலையே காணப்படுகிறது. கண்டி மாவட்டத்தில் 25 பாடசாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் 6 மாதங்கள் கடந்தும் இதுவரை ஒரு பாடசாலையைகூட வேறு இடத்துக்கு கொண்டுசெல்ல வில்லை. அரசாங்கத்தின் செயற்திறமை இல்லாமையே இதற்கு காரணமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற மத்திய வங்கி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் 700 பில்லியன் ரூபா ஒதுக்கி இருந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றத்தையும் காணக்கூடியதாக இல்லை. கண்டி மாவட்டத்தில் 57 பாடசாலைகளின் கட்டிடங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதில் 25 பாடசாலைகளை வேறு இடங்களுக்கு கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த 25 பாடசாலைகளில் ஒரு பாடசாலையைகூட வேறு இடத்துக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த இடங்களிலேயே பாடசாலை இடம்பெற்று வருகிறது. அண்மையில் பெய்த கடும் மழை காரணமாகவும் அந்த மாணவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தனர்.
இதுதொடர்பில் கண்டி மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதன்போதும் தனிநபர் நட்டங்கள் தொடர்பான கொடக்கல் வாங்கல்கள் தொடர்பிலே கலந்துரையாட வேண்டி ஏற்பட்டது.அதிலும் தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் அறிக்கையை வழங்குவதில் இன்னும் தாமதமாகியுள்ளது.
அனர்த்தம் இடம்பெற்று 6 மாதங்கள் கடந்துள்ளன. கண்டி மாவட்டத்தில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் சிலவற்றை வேறு இடங்களுக்கு இடமாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் இதுவரை அதனை செய்ய முடியாமல் போயிருக்கிறது. 6 மாதங்கள் சென்றும் ஒரு கட்டிடத்தைக்கூட நிர்மாணிக்க முடியாமல்போயிருக்கிறது. அரசாங்கத்தின் செயற்திறமை இல்லாமையே இதற்கு காணமாகும்.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள கட்டியெழுப்புவதற்காக பாரியளவில் நன்கொடைகள் கிடைத்தாலும் அரசாங்கம் 700 பில்லியன் ரூபா ஒதுக்கியிருந்தாலும் அதனை இந்த விடயங்களுக்காக பயன்படுத்தாத நிலையை நாங்கள் விமர்சித்தே ஆகவேண்டி இருக்கிறது.என்றார்.
அனர்த்த நிதி இருந்தும் முடக்கம் ; கண்டியில் ஒரு பாடசாலை கூட இடமாற்றப்படவில்லை - ரவூப் ஹக்கீம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space