அரசாங்கம் நேர்மையாகவும் நேரடியாகவும் செயற்பட்டு அனோஜனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை இலகுபடுத்த வழி வகுத்துள்ளதாக முஸ்லிம் மத விவகார கலாசார பிரதியமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) புதன்கிழமை இடம்பெற்ற பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பிரேரணை மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான ஆறாயிரம் மில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் இன மத பேதமின்றி அனைவரதும் எதிர்பார்ப்பு அனோஜனை மரண தண்டணையில் இருந்து விடுவிப்பதாகவே அமைந்திருந்தது. அதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்தனர். 

அத்துடன் அவருக்கு சவூதி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை இலகு படுத்துவதற்கான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகள் பயனளித்தன. 

அரசாங்கத்தின் பொறுப்பு ஊடகங்களுக்கு ‘வொய்ஸ் கட் ‘வழங்குவது அல்ல. எடுத்துக்கொண்ட வேலையை நேர்மையாக மனசாட்சியுடன் செய்து முடிப்பதாகும். அதனை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா சபையில் வெளிப்படுத்தியதைக் காண முடிந்தது. 

இவ்வாறு இந்த பிரச்சினை தீராமல் இருந்திருக்குமானால் அதனை வைத்து அரசியல் செய்வது ஒரு தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. மீண்டும் இனவாதத்தைப் பரப்பி நாட்டில் நிலவும் அமைதி நிலையை சீர்குலைத்து அதை வைத்து அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் அரசாங்கம் அந்த விடயத்தில் நேர்மையாகவும் நேரடியாகவும் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

அரசாங்கம் எப்போதும் பொய் கூறி வருவதாக சில தினங்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கூறி வருவதை காண முடிந்தது. ஆனால் மகாநாயக்க தேரரிடம் இவர்கள் இவ்வாறு பொய் கூறி அசிங்கப்பட்டதை ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.  

நாட்டு மக்களைத் தொடர்ந்தும் தவறான வகையில் திசை திருப்பி, மக்களைத் தூண்டி விடும் நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர்கள் எந்த நிலையிலிருந்து, எதற்காக அவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை முழு நாட்டு மக்களுக்கும் அறிய முடியும்.

ஐக்கியம், ஒருமைப்பாடு தொடர்பான ஐந்து நாள் சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு என்க்கு கிடைத்தது. அப்போதுதான் ஏனைய நாடுகள் எவ்வாறான நிலையில் உள்ளன என்பதை என்னால் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது . நாட்டில் ஐக்கியம் தொடர்பில் பேசிக்கொண்டு அதனை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் தொடர்பில் கவலைப்பட வேண்டியுள்ளது என்றார்.