இத்தாலிய கலைஞர் எடுவார்டோ காஸ்டால்டோ (Eduardo Castaldo) உருவாக்கியுள்ள ஒரு நெகிழ்ச்சியான கலைப்படைப்பு உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயேசு குழந்தையைத் தனது கைகளில் ஏந்தியிருக்கும் அன்னை மரியாளின் உருவத்திற்கும், போரினால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீனியத் தாய் ஒருவர் தனது குழந்தையைத் தழுவியிருக்கும் புகைப்படத்திற்கும் இடையே இந்தக் கலைப்படைப்பு ஓர் ஆழமான ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. 

இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் அமைந்துள்ள Cappella Pappacoda தேவாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த நிறுவலில், அன்னை மரியாளின் உருவப்படத்தின் ஒரு பகுதி அகற்றப்பட்டு, அதன் அடியில் காஸாவைச் சேர்ந்த தாயும் குழந்தையும் இருக்கும் புகைப்படம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கலைஞரின் 16 படைப்புகளைக் கொண்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

மதம், இனம், நாடுகள் என எந்த எல்லைகளையும் தாண்டி தாய்மையின் அன்பும் வலியும் ஒன்றே என்பதை இந்தக் கலைப்படைப்பு உணர்த்துகிறது.

காஸா போரின் மத்தியில் துயரங்களை எதிர்கொள்ளும் பாலஸ்தீனியப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அவலநிலையை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதே இந்தப் படைப்பின் முக்கிய நோக்கமாகும்.