அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை சைக்கிள் ஓட்டப் போட்டிக்காக ஏராளமான போட்டியாளர்கள் திரண்டிருந்தபோது, அவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 9 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இண்டியான மாகாணத்தின் புளுமிங்டன் நகரில் உள்ள இண்டியானா பல்கலைக்கழத்தின் அருகில் நடைபெறவிருந்த புகழ்பெற்ற “லிட்டில் 500” சைக்கிள் ஓட்டப் போட்டிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களும் பொதுமக்களும் கூடியிருந்தபோது, திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் பாதுகாப்பு கருதி தப்பி ஓடினர். எனினும், 9 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இவர்களில் 5 பெண்கள் நேரடியாக தாக்கப்பட்டு காயமடைந்ததாகவும் 17 வயது சிறுமி உட்பட ஏனைய 4 பேர் தப்பி ஓட முயன்றபோது காயமடைந்ததாகவும், சிறுமி தவிர காயமடைந்த ஏனையவர்கள் 18 -21 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் தொடர்பாக அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டவர் யார்? எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினார்? என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், தாக்குதல் தொடர்பான உண்மைகளையும் சந்தேக நபரையும் கண்டறிய தீவிர விசாரணையில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு, முதல் நாள் சனிக்கிழமை (25) மாலை வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை சர்வதேச மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து மற்றுமொரு துப்பாக்கிச் சூடாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு! ; 9 பேர் காயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space