அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம். தற்போது கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அழிப்போம் என்று ஈரான் உறுதி அளித்திருக்கிறது. இதன்படி ஈரானின் குறிப்பிட்ட சில அணு சக்தி நிலையங்கள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்கப்பூர்வமான அணு சக்தி திட்டத்தை ஈரான் தொடரலாம். ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது என்று அமெரிக்கா நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஈரான் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக நீக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள ஈரானின் சொத்துகள், டெபாசிட் விடுவிக்கப்படும் என்று அமெரிக்கா உறுதி அளித்திருக்கிறது. எனினும் போர் நிறுத்தம் மீறப்பட்டால் அமைதி ஒப்பந்த விதிகள் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், "அமெரிக்கா, ஈரான் இடையே பாகிஸ்தான் சமரச தூதராக செயல்படுகிறது. இரு நாடுகள் இடையே அடுத்த 24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் அடுத்த வாரம் இரு நாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்களின் பேச்சுவார்த்தை தொடங்கும்.
அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஒத்துழைப்பு அளித்த அமெரிக்கா, ஈரானுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அமைதி முயற்சியில் எங்களுக்கு ஆதரவு அளித்த வளைகுடா நாடுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறியுள்ளார்.