வட அத்திலாந்திக் கடலில் அமைந்துள்ள பெர்முடா தீவிலிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நோக்கி 6 பேருடன் பயணித்தபோது ரேடார் தொடர்பை இழந்து காணாமல் போன மருத்துவ விமானத்தின் சிதைவுகள் அமெரிக்கக் கரையோரக் காவல் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மசாசூசெட்ஸ் மாநிலத்தின் நன்டுக்கெட் தீவுக்கு அப்பால் உள்ள அத்திலாந்திக் பெருங்கடல் பகுதியில் விமானத்தின் சிதைவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
எனினும், விமானத்தில் பயணித்தவர்களின் நிலைமை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், அவர்களை மீட்கும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
‘லாட்டிட்யூட் ஏர் ஆம்புலன்சஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான Gulfstream G-100 ரக சிறிய விமானத்தில் 2 விமானிகள், 2 கனேடிய மருத்துவ ஊழியர்கள், பெர்முடாவைச் சேர்ந்த நோயாளி ஒருவர் மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை அதிகாலை, 24,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் மிக வேகமாக 11,000 அடி உயரத்துக்கு கீழிறங்கியுள்ளது.
இதன்போது, விமானத்தில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் விமானிக்கும் இடையிலான தொடர்பு பலவீனமடைந்த சில நிமிடங்களில் விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து முற்றாக மறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அமெரிக்கக் கரையோரக் காவல் படையினர் கப்பல்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தி நன்டுக்கெட் கடற்பரப்பில் இரவு முழுவதும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
