ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்கு இடையே, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகிய உலகின் மூன்று மிகப்பெரிய அணு ஆயுத வல்லரசுகளின் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை (19) வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

சீனாவின் தெற்கு நகரமான ஷென்செனின் வடமேற்கு மலைப்பகுதியில் அமைந்துள்ள அரச விருந்தினர் மாளிகையான கைலின் வில்லாவில் சுமார் 90 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

வட்டமேசையைச் சுற்றி அமர்ந்து ஆரம்ப உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "நாம் உண்மையிலேயே வரலாறு படைக்கிறோம்; பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை நிராகரிப்பதன் மூலம் எந்த அமைதியும் உருவாக்கப்பட்டதில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுதக் குறைப்பு மற்றும் உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாட தாம் முன்னுரிமை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மோதல் உட்படப் பிராந்தியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மூன்று நாடுகளுக்கும் பொதுவான நலன்கள் இருப்பதாகக் கூறிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உலக அமைதி மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்த மூவரும் ஆக்கபூர்வமாக ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சீன ஜனாதிபதி ஷீ  ஜின்பிங், தமது ஆரம்ப உரையில் உக்ரேன் விவகாரத்தை நேரடியாகக் குறிப்பிடாத போதிலும், "பெரும் வல்லரசுகள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தால் உலகம் அமைதியாக இருக்கும்; அவை மோதிக் கொண்டால் உலகம் குழப்பத்தில் விழும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், அணு ஆயுதப் போரை ஒருபோதும் வெல்ல முடியாது எனவும், அணு ஆயுதங்களை முழுமையாகத் தடைசெய்து ஒழிப்பதே இறுதி இலக்காக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1945 ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற 'யால்டா மாநாட்டுடன்' இந்தச் சந்திப்பு ஒப்பிடப்படுகிறது. பெரும் இராணுவ வல்லரசுகள் தமது நலன்களைப் புறக்கணித்து விடுமோ என்ற அச்சம் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சிறிய பொருளாதார நாடுகளிடையே எழுந்துள்ளது. எனினும், மூன்று தலைவர்களும் மாறுபட்ட மூலோபாய நலன்களைக் கொண்டுள்ளதால் உடனடிப் பாரிய உடன்பாடுகள் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முத்தரப்புச் சந்திப்புக்கு முன்னதாக, இதே இடத்தில் ஷீ ஜின்பிங் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில் வர்த்தகம் மற்றும் வரி விதிப்புகளைச் சமநிலைப்படுத்துவது குறித்து ட்ரம்ப் பாராட்டுத் தெரிவித்த அதேவேளை, சீன-அமெரிக்க உறவுகள் நிலையான மற்றும் ஆக்கபூர்வமான பாதையில் பயணிப்பதாக ஷீ ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், ட்ரம்ப் மற்றும் புட்டின் இடையேயும் சுமார் 40 நிமிடங்கள் தனிப்பட்ட சந்திப்பு நடைபெற்றுள்ளது.