அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. இது உச்சக்கட்ட பாதுகாப்பு நிறைந்த பகுதியாகும். இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு வடக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள லோகன் சர்க்கிள் பகுதியில் நேற்று துப்பாக்கிச் சூடு நடந்தது. அங்குள்ள உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார்.
பின்னர் உடற்பயிற்சி கூடத்தை விட்டு வெளியேறிய அந்த மர்ம நபர் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்துக்கு சென்றார். அங்கு தரைத்தளத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. அங்கிருந்த அனைவரும் உயிர் பிழைப்பதற்காக நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
4 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடிக்கு சென்று, துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.