தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீதான சொத்துக் குற்றச்சாட்டுக்களும் பாரிய மோசடிகளாகத் தெரியவில்லை. ஜனாதிபதித் தேர்தல் குறித்துக் கனவு காண்பவர்களுக்கு மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டின் எதிர்காலத்துக்காக ஒருமித்துச் செயற்படக்கூடிய, ஊழலற்ற, அறிவுசார்ந்த மற்று ம் நேர்மையான ஒரு குழுவினர் எம்முடன் இணைந்துள்ளனர். இவர்கள் முன்னொருபோது ம் அரசியலில் ஈடுபட்டவர்கள் அல்ல.
நான் கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டவன் என்ற ரீதியில், தற்போது எதிர்க்கட்சியில் உள்ள பிரதான கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டபோது எங்குமே நாட்டுப்பற்றுமிக்க, ஒழுக்கமான அரசியல் கலாசாரத்தைக் காணவில்லை. இதனாலேயே நான் அந்த அரசியலில் இருந்து ஒதுங்கினேன்.
தற்போதைய அரசாங்கம் மக்களின் ஆசீர்வாதத்துடனேயே ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுவதால் அவர்களுக்கு எமது ஆசி உண்டு. ஆனால், நாட்டில் தற்போது பலமான மாற்று எதிர்க்கட்சி ஒன்று இல்லை.
தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் ஊழல் நிறைந்தவை. எனவே, நாட்டு மக்களுக்குத் தேவையான ஒரு தூய்மையான மாற்று எதிர்க்கட்சியை உருவாக்குவதே எமது தற்போதைய நோக்கமாகும். எதிர்காலத்தில் மக்கள் தற்போதைய ஆட்சிக்கு மாற்றாக ஒரு தரப்பைத் தேடும்போது, தகுதியானவர்களுடன் இணைந்து மக்களின் பக்கம் நிற்க நாம் தயாராக இருக்கின்றோம்.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் மற்றும் 250 மில்லியன் டொலர் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.
ஏதேனும் ஒரு பலவீனத்தால் அத்தகைய தவறு நடந்திருந்தால், அது குறித்து அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுப்பதே சிறந்தது. தற்போதைய அரசாங்கம் அத்தகைய விசாரணைகளைச் செய்யும் என நாம் நம்புகிறோம்.
மேலும், தற்போதைய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் வேடிக்கையானவை. முன்னைய ஆட்சியாளர்கள் பில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்தார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த அமைச்சர்கள் மீது கூறப்படும் தொகைகள் மிகச் சொற்பமானவை.
உதாரணமாக, அமைச்சர் லால் காந்தவிற்கு 40 மில்லியன் ரூபா சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போதைய பொருளாதார நிலையில்60 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதன் தனது உழைப்பின் மூலம் இவ்வளவு தொகையைச் சேமித்து வைத்திருப்பது பெரிய காரியமல்ல. இது மிகப்பெரிய மோசடியும் அல்ல.
75 வருடங்களாக நாட்டைச் சூறையாடி, தமது பிள்ளைகளுக்கும் தமக்கும் சொத்துக்களைச் சேர்த்துக்கொண்டவர்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்க மக்கள் ஒருபோதும் முட்டாள்களாக இருக்க மாட்டார்கள். அத்தகையவர்கள் ஒருபோதும் திருந்தப்போவதும் இல்லை.
அவர்களை மீண்டும் நம்பினால் இந்த நாடு உருப்படாது.அதேபோல், இந்த அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளையோ வரப்பிரசாதங்களையோ பெற்றுக்கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. அத்தகைய பதவிகளுக்காகக் கைநீட்ட வேண்டிய தேவை எனக்கில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்றும், நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவார் என்றும் அவர்களது தரப்பினர் கூறுகின்றனர்.
கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்களா என்பதே கேள்வி. கடந்த காலத் தேர்தல்களில் மக்கள் அவர்களைப் புறக்கணித்ததை நாம் கண்டோம். இத்தகையவர்களின் பகற்கனவுகளுக்கு மக்கள் மீண்டும் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என்றார்.
அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பாரிய மோசடிகளாகத் தெரியவில்லை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space