வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை (10) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் அரசுக்கு பல கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை (10) காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது. இதன் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்களிப்பு இடம்பெறும்.
ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில், நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கு போதுமான மற்றும் தரமான நிலக்கரி கொள்வனவை உறுதிப்படுத்துவதில் வலுச்சக்தி அமைச்சர் தமது அடிப்படைக் கடமையை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளார்.
அதுமட்டுமன்றி தற்போதைய வலுச்சக்தி அமைச்சர் இலங்கை உரக் கம்பனியின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றிய போது ஊழல் செயல்பாடு ஒன்றை மேற்கொண்டதற்காக அவருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் முறையான குற்றப்பகர்வுப் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளதாலும் அரச நிதி இழப்பு, தேசிய வலு சக்தி பாதுகாப்பை அபாயத்தில் ஆழ்த்துதல், ஊழல் முறையில் கொள்வனவு செயல்முறையை கையாளுதல, ஊழல் தவறு என்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அதன் பங்காளிக்கட்சிகள் மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சி, புதிய ஜனநாயக முன்னணி, பொதுஜன பெரமுன, சுயேட்சைக்குழு 17, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாட்டில் இருப்பதால் வாக்களிப்பில் பங்கேற்கமாட்டார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இறுதி நேரத்தில் தமது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space