இலங்கை கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் கிரிந்த கடலோரப் பாதுகாப்பு நிலைய அதிகாரிகளால் அம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பாதுகாக்கப்பட்ட மீன் இனமான சுமார் 12.4 கிலோகிராம் நிறையுடைய இளஞ் சிவப்பு நிற மீன்களைத் தம்வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் குறித்த தடைசெய்யப்பட்ட மீன் தொகை மீட்கப்பட்டதையடுத்து, கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கமைய, 'இளஞ் சிவப்பு நிற' மீன் இனத்தைப் பிடித்தல், தம்வசம் வைத்திருத்தல், கொண்டு செல்லுதல், கொள்வனவு செய்தல், விற்பனைக்காகக் காட்சிப்படுத்துதல், விற்பனை செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் ஆகியன சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 30 வயதுடையவர்களாவர்.
அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடல்சார் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் உரிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தி இலங்கை கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

