அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பகுதியானது கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுவருவதாகவும் அதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என அட்டப்பள்ளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீண்ட பழமையான பாரம்பரியங்களைக்கொண்ட தமிழ் கிராமமமாக காணப்படுகின்ற நிலையில் அண்மைக்காலமாக அட்டப்பள்ளத்தின் கரையோரப்பகுதிகள் பாரியளவில் கடலரிப்புக்கு உள்ளாகிவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுவந்தபோதிலும் அது பாரியளவிலான கடலரிப்பாக இல்லாத நிலையிலும் அண்மைக்காலமாகவே கடலரிப்பானது பாரியளவில் இடம்பெற்றுவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரு மாதங்களாக பாரியளவில் கடலரிப்பு இடம்பெற்றுவருவதாகவும் சுமார் 500மீற்றருக்கும் அதிகமான பகுதிகள் கடல் உள்வாங்கியுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டவர்களின் காணிகள் கடலுக்குள் சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் உள்ள மக்கள் அதிகளவில் தென்னை உற்பத்தியை நோக்காக கொண்டு தென்னை தோப்புகள் காணப்படுகின்றபோதிலும் தினமும் தென்னை மரங்கள் கடலுக்குள் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அருகில் இருக்கும் அரசியல்வாதியொருவர் கடலுக்குள் பாறை கற்களை கொட்டியுள்ளதன் காரணமாகவே கடலரிப்பானது மக்கள் குடியிருப்பினை சூழ அதிகளவில் நடைபெறுவதாகவும் இது தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கொண்டுசெல்லப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கரையோரப்பகுதிகளிலும் வாழும் மக்கள் தினமும் உயிரை கையில் பிடித்தே வாழும் நிலைமை காணப்படுவதாகவும் இரவில் தூங்கும்போது கடல் கொண்டுசென்றுவிடுமோ என்ற அச்சத்துடனேயே தினமும் தூங்கும்போது அச்சத்துடன் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கரையோரம்பேணல் திணைக்களம்,பிரதேச செயலகம்,பிரதேச செயலாளர்,மாவட்ட செயலகம்,ஜனாதிபதி மற்றும் உரிய அமைச்சுகளின் கவனத்திற்கு கடந்தகாலத்தில் கொண்டுசென்றபோதிலும் இதுவரையில் எந்தவிதமான தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். தனியொருவர் கடலுக்குள் கற்பாறைகளை போட்டுள்ளமை தொடர்பில் கரையோரம்பேணல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான பல்வேறு தரப்பினருக்கும் அறிவித்தல்களை வழங்கியபோதிலும் எவரும் கவனத்தில் கொள்ளவில்லையெனவும் அதேபோன்று தமது பகுதிகளிலும் கற்களை போடுவதன் மூலமே கடலரிப்பினை தடுக்கமுடியும் என நம்புவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லத்தீப் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் உhயி திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் குறித்த பகுதிகளில் ஆறு இடங்களில் கடலரிப்பனை தடுப்பதற்கான அணைகள் அமைப்பதற்கான திட்டமுன்மொழிவுகளும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அப்பகுதிக்கு விஜயம் செய்து குறித்த பகுதிகளில் கடலரிப்பினை தடுப்பதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.