நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தைத் தாம் முற்றாக நிராகரிப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் எடுத்துரைத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், இதுபற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் தூரநோக்கு சிந்தனையற்றது எனவும், அதனை முற்றாக எதிர்ப்பது எனவும் நாடளாவிய ரீதியில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்புடன் புதன்கிழமை (29) நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து புதன்கிழமை (29) மாலை 5.00 மணிக்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தலைமையிலான சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசாங்கம் முன்வைத்திருக்கும் யோசனையை தாம் முற்றாக எதிர்ப்பதாகவும், அது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைப் பாதிக்கும் நடவடிக்கை என்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
அதுமாத்திரமன்றி இதுபற்றி கலந்தாலோசிப்பதற்காக ஏற்கனவே சந்திப்பொன்றைக் கோரியிருந்த போதிலும், அதற்கு இடமளிக்காமல் மிக அவசரமாக இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டிய அவசியம் என்ன? என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய அவர்கள், இதுவரை காலமும் புதிய சட்டங்கள் அல்லது சட்டத்திருத்தங்களைக் கொண்டுவரும்போது சட்டத்தரணிகள் சங்கத்திடம் ஆலோசனை பெறப்பட்டிருக்கும் நிலையில், இவ்விடயத்தில் மாத்திரம் அதனை ஏன் செய்யவில்லை? என்றும் காட்டமாக வினவினர்.
அத்தோடு ஏற்கனவே ஓய்வுபெறும் வயதை எட்டிய நீதியரசர்கள் ஓய்வுபெற்றதன் பின்னர், இப்போது இத்திருத்த யோசனை முன்வைக்கப்படுவதானது, குறித்தவொரு நீதிபதியை மாத்திரம் இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையா என்ற நியாயமான சந்தேகத்தைத் தோற்றுவித்திருப்பதாகவும் அவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இச்சட்டத்திருத்த யோசனை அனைத்து நீதிபதிகளுக்கும் பொதுவானதாகவே கொண்டுவரப்படுவதாகவும், தான் கட்சியின் தீர்மானம் மற்றும் அமைச்சரவையின் தீர்மானம் உள்ளிட்ட கூட்டுப்பொறுப்புக்குக் கட்டுப்பட்டே செயற்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய விடயங்களை ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலிறுத்த சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள், அவ்வாறெனில் இவ்விடயங்களைத் தாமே ஜனாதிபதியிடம் கூறுவதாகவும், அவருடனான சந்திப்புக்கு நேரத்தை ஒதுக்கித்தருமாறும் கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர், தான் ஜனாதிபதியிடம் இதுபற்றிப் பேசுவதாகக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் யோசனையை முற்றாக நிராகரிக்கிறோம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space