அர்ச்சுனா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
Ad Space
Ad Space
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் இருதரப்பு விவாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், குறித்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, எதிர் மனுதாரர் தரப்புச் சமர்ப்பணங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தன்னைத் தொந்தரவு செய்யும் வகையிலும், அவதூறுகளைப் பரப்பும் நோக்கிலும் செய்திகளையும் பரப்புரைகளையும் மேற்கொண்டதாகத் தெரிவித்து, தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு வைத்தியரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அர்ச்சுனா இராமநாதன், மற்றொரு வைத்தியர், தனியார் ஊடகம் மற்றும் யூடியூப் தளங்கள் உள்ளிட்ட சில தரப்புகளுக்கு எதிராகவே நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனாவும், அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
Ad Space
Ad Space