அவள் எழுந்த தருணம் அடக்குமுறை நடுங்கியது!
Ad Space
Ad Space
மார்ச் எட்டின் விடியல்
மலர் வாசம் மட்டும் அல்ல,
வரலாறு நனைந்த ரத்தத் துளிகளின்
மௌன நினைவுச் சின்னம்.
பெண்
வீட்டின் விளக்காய் சொன்னார்கள்,
ஆனால் அவள்
போரின் இருளில் தீப்பொறியாக நின்றாள்.
சங்கிலிகள் சிணுங்கிய காலத்தில்
சமத்துவம் கனவாய் இருந்தபோது
தன் பெயரைத் தானே எழுதி
தன்னாட்சி பாடல் பாடினாள்.
தமிழீழத் தரணியில்
புயலாய் வீசிய காலம்
அச்சமெனும் வார்த்தையை
அகராதியில் இருந்து கிழித்தெறிந்த
அந்தப் பெண் போராளிகள்!
பாரம்பரியச் சுவர்களை உடைத்து
புதிய பாதை பதித்தவர்கள்;
“பெண் பலவீனம்” என்ற பொய்யை
போரின் நடுவே சிதைத்தவர்கள்.
அவள் கையில் ஆயுதம் இருந்தது,
ஆனால் இதயத்தில்
ஒரு இனத்தின் எதிர்காலம் இருந்தது.
அவள் கண்களில் கோபம் இருந்தது,
ஆனால் அந்தக் கோபம்
அநீதிக்கு எதிரான நீதி.
இழப்புகளின் இரவில் கூட
அவள் விழுந்து கிடக்கவில்லை;
விழுந்தாலும்
விதையாய் மாறி முளைத்தாள்.
போராடிய பெண் தோற்கவில்லை;
அவள் தலைமுறைகளை எழுப்பினாள்.
இன்று
மகளிர் நாள் மலர்கள் மலர்கின்றன,
ஆனால் அவள் நினைவு
மனங்களில் மெழுகுவர்த்தி அல்ல
எரியும் விளக்காகவே நிற்கிறது.
பெண் எழுச்சி ஒரு நாளின் கொண்டாட்டமல்ல,
அது ஒரு இனத்தின் உறுதி.
அவள் நடக்கும் பாதை
சமத்துவத்தின் பாதை.
அவள் சுவாசிக்கும் காற்று
சுதந்திரத்தின் வாசம்.
எழுந்திடும் பெண்
எழுச்சி காணும் உலகம்.
அவள் குரல் ஒலிக்கட்டும்
அது இனி மௌனமல்ல,
மாற்றத்தின் முழக்கம்.
Ad Space
Ad Space