நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதான வீதிகளின் ஆபத்தான வளைவுகள் மற்றும் செங்குத்தான சரிவுகளைக் கொண்ட பகுதிகளில் பாதுகாப்பு இரும்பு வேலிகளை அமைக்கும் பணிகளை நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
சர்வதேச தரம் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அமைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இப் பாதுகாப்பு வேலிகள், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கல முதல் தலவாக்கலை வரையிலும், தலவாக்கலை - புண்டுலுஓயா வீதியிலும் மற்றும் கினிகத்தேனை - தியகல ஊடான சிவனொளிபாதமலை வீதியிலும் அமைக்கப்படவுள்ளன.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி இது குறித்துக் குறிப்பிடுகையில், இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் 10.5 கிலோமீற்றர் தூரத்திற்கு இப் பாதுகாப்பு வேலிகளை அமைத்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இவ் வீதிகளில் அதிகளவான வாகன விபத்துக்கள் இடம்பெற்றமையினாலேயே இப் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 2026 - 2027 சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் ஆரம்பமாவதற்கு முன்னதாக இப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இரவு நேரங்களில் இவ் வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்குப் பாதுகாப்பு வேலிகள் தெளிவாகத் தெரியும் வகையில் ஒளியைப் பிரதிபலிக்கும் சமிக்ஞை அமைப்புகளும் இவ் வேலிகளில் பொருத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.






