சிறிலங்கா காவல் துறை குற்றப் பிரிவினர் இரு வேறு பகுதிகளில் நடத்திய விசேட சோதனை நடவடிக்கைகளின்போது ரி-56 ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பவற்றுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, செவ்வாய்க்கிழமை காலை அங்குருவாதொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கஹவத்த பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ரி-56 ரக துப்பாக்கி ஒன்று, அந்த துப்பாக்கிக்கான 16 தோட்டாக்கள் மற்றும் மெகசின் ஆகியவற்றுடன் 32 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர், அங்குருவாதொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கமைய, ராகமை, போட்டுவத்த பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, அதற்கான மெசின் மற்றும் 24 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.