ஆளுநர் செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல்!
Ad Space
Ad Space
வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள், மருத்துவமனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாகாண சுகாதாரத்துறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (19) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான மாகாண உயரதிகாரிகளுக்கு இடையே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.இலங்கையின் ஏனைய மாகாண சபைகளுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபையே அதிகளவான மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது. மாவட்டப் பொது மருத்துவமனைகளும் மாகாண சபையின் கீழ் இயங்கி வருவதால், இங்கு அதிகளவான மூலதன மற்றும் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு அவசியமாகின்றது.நிதி ஆணைக்குழுவினால் ஒதுக்கப்படும் பராமரிப்பு நிதி போதுமானதாக இல்லாத நிலையில், அதிக அளவிலான மருத்துவமனைகள் மற்றும் உட்கட்டமைப்புகளைப் பராமரிப்பது மாகாண சுகாதாரத்துறைக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளுக்குத் தனித்தனியாக நிதி ஒதுக்கப்படாமல், மாகாண சுகாதாரத் திணைக்களத்திற்கு ஒட்டுமொத்தமாக நிதி வழங்கப்படுவதால் நிர்வாக ரீதியாக ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் அமைச்சருக்கு விளக்கப்பட்டது.கொள்முதல் மற்றும் முன்னுரிமைப்படுத்தல்: மருத்துவமனைகளின் தேவைகளை முறைப்படி வரிசைப்படுத்தி, முன்னுரிமை அடிப்படையில் நிதி வழங்குதல் மற்றும் கொள்முதல் (Procurement) நடவடிக்கைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் தற்போதைய தேவைகள் மற்றும் சவால்களைக் கேட்டறிந்த சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறிப்பாக மேலதிக நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக நிதி ஆணைக்குழுவுடன் நேரடியாகக் கலந்துரையாடி உரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Ad Space
Ad Space