மத்திய மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில், மத்திய மாகாண ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோவிற்கும் இலங்கையிலுள்ள பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சனிக்கிழமை (24) இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, மத்திய மாகாணத்தின் கல்வித் துறையின் முன்னேற்றம் மற்றும் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் அனர்த்த நிலைமைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, நுவரெலியா மாவட்ட மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் சீரற்ற வானிலை மற்றும் அதனோடு தொடர்புடைய அனர்த்தங்களின் தாக்கங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பில் மத்திய மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் வருண மியனதெனியவும் கலந்துகொண்டார்.
இவ்வுறவுசார் சந்திப்பைக் குறிக்கும் வகையில் மத்திய மாகாண ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ, பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனிக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தார்.