இளம் தலைமுறையினரைத் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைப்பதற்கான விசேட நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்துள்ளது. கட்சியை நவீனப்படுத்தும் மறுசீரமைப்புப் பணிகளின் ஓர் அங்கமாக, 'மிலேனியல்' (Millennials) மற்றும் 'ஜென்சி' (Gen Z) தலைமுறையினரைக் கட்சியின் பலம்வாய்ந்த சக்தியாகக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த இளம் தலைமுறையினர், தமது சிந்தனைகளுக்கு ஏற்ப எதிர்காலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கட்சித் தலைமையினால் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களது செயற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், அதனைச் சுட்டிக்காட்டும் பணியை மாத்திரமே ஐ.தே.க தலைவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருவதாகக் கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இலங்கை அரசியல் வரலாற்றில், அரசியல் கட்சியொன்று 'மிலேனியல்' மற்றும் 'ஜென் சி' தலைமுறையினரை இலக்கு வைத்து இவ்வாறானதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். எதிர்வரும் தேர்தல்களில் தீர்மானிக்கும் சக்தியாக இவர்களே விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், 'ஜென் சி' தலைமுறையினரைப் பயன்படுத்தி அரசியல் சக்திகளை உருவாக்கிய அண்டைய நாடுகளின் அனுபவங்களை ஆராய்ந்து, திட்டமிட்ட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கான ஆலோசனைகளையும், சர்வதேச அனுபவங்களையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் சைபீரியா உள்ளிட்ட சில முக்கிய நாடுகளின் இளம் அரசியல் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
உலகின் பல நாடுகளில் நவீன இளம் தலைமுறையினரின் எழுச்சியினால் பாரிய ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இதற்குச் சிறந்த முன்னுதாரணங்களாகத் திகழ்கின்றன. மறுபுறம், இன்னும் பல நாடுகளில் இளம் சமுதாயத்தினர் தமது உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இவ்வாறானதொரு உலகளாவிய சூழ்நிலையிலேயே, இலங்கையின் நவீன இளம் சமூகத்தினரை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் ஆக்கப்பூர்வமாக இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.