கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கொன்சியூலர் முகாம் இன்று (26) திங்கட்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது.

இந்திய விசா, கடவுச்சீட்டு மற்றும் ஏனைய தூதரக சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாம், திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த முகாமில், இந்திய விசா சேவைகள்,  சுற்றுலா, மருத்துவம், கல்வி அல்லது ஆன்மீகப் பயணங்களுக்காக இந்தியா செல்ல விரும்பும் இலங்கை குடிமக்களுக்கான விசா விண்ணப்ப வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

இலங்கையில் வசிக்கும் இந்தியப் பிரஜைகளுக்கான புதிய கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் காலாவதியான கடவுச்சீட்டுகளைப் புதுப்பித்தல் போன்ற சேவைகளும் இடம்பெற்றன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை அட்டைகளைப் பெறுவதற்கான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய தூதரக இந்திய கொன்சியூலர் சஞ்சீவ அரோரா,  இந்திய தூதரக கொன்சியுலரின் இரண்டாவது செயலாளர் எம். காண்டீபன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை முதல்வர் கந்தசாமி செல்வராஜா (சுப்ரா) , மாநகர சபை ஆணையாளர் உ. சிவராஜா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்விச் சான்றிதழ்கள், பிறப்பு,திருமணச் சான்றிதழ்கள் மற்றும் வணிக ரீதியான ஆவணங்களை இந்தியத் தூதரகத்தின் மூலம் சான்றொப்பம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, கொழும்பு வரை செல்லாமல், தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே தூதரக அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் கிடைத்ததாக, சேவை நாடி வந்த மக்கள் தெரிவித்தனர்.