இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு மேற்கே சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள செராங் மாவட்டத்தில் அமைந்துள்ள இனிப்பு மற்றும் சீனிப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 36 பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு தேடுதல் மற்றும் மீட்புப் பணியக அதிகாரி அறிவித்துள்ளார்.

பான்டென் மாகாணத்தின் செராங் மாவட்டத்தில் உள்ள சிகாண்டே பகுதியில் அமைந்துள்ள 'ஃபொனுசா அகுங் மூலியா' என்ற மூன்று மாடித் தொழிற்சாலையில் நேற்று சனிக்கிழமை (21) பிற்பகல் 4.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலைக்குள் சுமார் 60 பேர் பணியாற்றிக் கொண்டிருந்ததாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் இதுவரை 03 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிர் தப்பிய 15 பேரில் காயமடைந்த 04 பேர் அருகிலுள்ள வைத்தியசாலை மற்றும் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 36 பணியாளர்களின் நிலை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை

தொழிற்சாலையின் கூரைப் பகுதிகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இன்று (22) ஞாயிற்றுக்கிழமை வரை தொழிற்சாலையின் சில பகுதிகளில் தீ தொடர்ந்தும் எரிந்து வருவதால் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணியக அதிகாரி ரிஸ்கி த்வியாண்டோ தெரிவித்துள்ளார். 

மூன்றாவது மாடியில் இருந்த குளிரூட்டும் இயந்திரத்தில் இருந்தே தீ பரவியதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ள போதிலும், விபத்திற்கான சரியான காரணம் குறித்து உள்ளூர் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.