இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் உள்ள ரயில்வே கடவையில், பயணிகள் ரயில் ஒன்று மினிபஸ் மீது மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை (20) சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சியாந்தர் நகரிலிருந்து மேடான் நோக்கிச் சென்று கொண்டிருந்த 'சியாந்தர் எக்ஸ்பிரஸ்' பயணிகள் ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மினிபஸ் மீது பயங்கரமாக மோதியுள்ளது மோதலின் வேகத்தால் தீப்பொறி ஏற்பட்டு, மினிபஸ் மற்றும் ரயிலின் முன்பகுதி என்ஜின் ஆகிய இரண்டும் தீப்பிடித்துக் கொழுந்துவிட்டு எரிந்து வரும் காணொளிகள் வெளியிடப்பட்டு பதைப்பதைக்க வைக்கின்றன.
இந்த விபத்தில் மினிபஸ் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகவும் ரயில் ஊழியர்கள் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரயிலில் இருந்த 264 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் இந்தோனேசிய ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டுத் தீயை அணைத்ததுடன், பாதிக்கப்பட்ட ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகளையும் முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.