மண்டைதீவு எக்கோரூறிச் வளாகத்தில் எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வடகின் இரவுகள் நிகழ்ச்சியை நடத்த வேலணை பிரதேச சபை அனுமதி வழங்காது என சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் செயலாளருக்கு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சில தினங்களாக யூடியூப் சமூக ஊடகம் ஒன்றில் மண்டைதீவு சுற்றுலா தளப் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கி வடக்கின் இரவு நிகழ்வு நடைபெறவுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இவ்விடையம் குறித்து இன்று வியாழக்கிழமை (22) சபை அமர்வில் உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் சபையின் ஆளுகைக்குள் இருக்கும் இந்த சுற்றுலா தளம் EOI என்னும் விருப்பம் தெரிவிப்பதற்கான கோரிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டது.
ஆனால் அங்கு குறித்த நிகழ்வுகள் நடத்த எந்தவொரு அனுமதியோ ஒப்பந்தமோ சபை குறித்த தரப்பினருடன் மேற்கொள்ளவில்லை.
எனவே, குறித்த ஏற்பாட்டு குழுவினரின் இந்த நிகழ்வுக்கு எத்தவித அனுமதியையும் வேலணை பிரதேச சபை அனுமதி வழங்கவில்லை. குறித்த தரப்பினரும் எந்தவொரு அனுமதியையும் கோரவில்லை.
எனவே சபையின் ஆளுகைக்குள் இருக்கும் குறித்த சுற்றுலா தளத்தில் நிகழ்வுகளை நடத்த சபை அனுமதிவழங்காது என்றார்.
இதேவேளை, குறித்த ஒப்பந்ததாரர்கள் சபையுடனான ஒப்பந்தத்தை மீறியமை, கலாசார சீரழிவுகளுக்கு உந்துதலளித்துவருகின்றமை, சபையின் பெரும் தொகை நிதியை சீரழித்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னகர்த்தப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான அனுமதியற்ற நிகழ்வுகளை குறித்த தரப்பினர் நடத்த முயற்சிப்பது வேலணையில் பெரும் அதிருப்பியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.