இராகலை சென் லெனாட்ஸ் தோட்ட மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஊடாக நியாயம் பெற்றுத்தரப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அமைச்சர்களான சமந்த வித்தியாரத்ன மற்றும் லால் காந்த ஆகியோருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் ஒரு நபரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பின்னணி கொண்ட சதி முயற்சிகள் விசாரணைகளின் பின்னர் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இராகலை - ஹால்கரலோயா சென் லெனாட்ஸ் தோட்டத்தில் குடியிருப்புக்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் அமைச்சர் லால் காந்த ஆகியோருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஜனவரி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கமையவே அந்த மக்கள் குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எவ்வாறிருப்பினும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கிருக்கிறது.
இந்த சம்பவத்தில் யாரும் அறியாத ஒரு அரசியல் பின்னணி காணப்படுகிறது. கடந்த ஆட்சி காலங்களில் ஒரு நபர் அந்த இடத்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாக அறியக்கிடைத்துள்ளது. விரைவில் இது குறித்த உண்மைகள் அம்பலப்படுத்தப்படும். விசாரணைகள் நிறைவடைவும் வரை சகல தகவல்களையும் வெளிப்படுத்த முடியாது.
காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுடன் அமைச்சு கலந்துரையாடல்களை முன்னெடுத்து அந்த மக்களுக்கு நியாயத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இராகலை சென் லெனாட்ஸ் தோட்ட விவகாரம் : அரசியல் பின்னணி விரைவில் அம்பலமாகும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space