காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி செய்வதுபோல், இராமேஸ்வரம் பாலத்தையும் அமைக்குமாறே நாங்கள் தெரிவிக்கிறோம். அது எமது நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துக்கு நல்லது. என்றாலும் பிமல் ரத்நாணயக்கவின் எதிர்ப்பினால் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகள் இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்தன என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (14) சனிக்கிழமை இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான இரண்டாம்  நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கம் என்ன தெரிவித்தாலும் பெலவத்தையிலே தீர்மானம் எடுக்கிறது. அதனாலே ரில்வின் சில்வா இந்தியாவுக்கு சென்றபோது, அவருக்கு பிரதமர் ஒருவர் சென்றால் வழங்கும் கெளரவம் வழங்கப்பட்டது. காங்கேசன் துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதற்கு எதிராக பிமல் ரத்நாயக்க செயற்பட்டுவந்தார்.அதனால் அவருக்கு அந்த அமைச்சும் இல்லாமல்போனது. 

ஆனால் , காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்போகிறது.  ஆனால் இவரின் நவடிக்கையால் காங்கேசன் துறைமுக அபிவிருத்தி நடவடிக்கை  இரண்டு வருடங்கள் தடைப்பட்டிருந்தது. என்றாலும் தற்போது அபிவிருத்தி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.

காங்கேசன் துறைமுகம் மாத்திரமல்ல, ராமேஸ்வரம் பாலத்தையும் அமைக்குமாறே நாங்கள் தெரிவிக்கிறோம். அது எமது நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துக்கு நல்லது. அதற்கும் நீங்கள் இணங்கவில்லை. இவ்வாறு நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறும்போதுதான் பிரச்சினைகள் எழுகின்றன என்றார்.