வரலாற்று ரீதியான புவிசார் அரசியல் திருப்பமாக இலங்கையிலிருந்து விடைபெறும் சீனத் தூதுவர் ஜி ஷென்ஹொங், இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசியப் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் மாற்றங்களும் பொருளாதாரச் சவால்களும் தீவிரமடைந்துள்ள சூழலில், சீனாவிற்கும் இலங்கைக்குமான உறவில் மிக முக்கியமான கட்டத்தை வழிநடத்திய சீனத் தூதுவர் ஜி ஷென்ஹொங் தனது ஆறு ஆண்டுகாலப் பணிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து விடைபெறும் நிலையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் வழிகாட்டுதலில், இருதரப்பு மூலோபாய உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இலங்கை வருகை தந்த தூதுவர், கொழும்பில் கழித்த இரண்டாயிரம் நாட்களை வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் உலகளாவிய சவால்கள், கொவிட் -19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பிராந்திய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ரப்பர்- அரிசி ஒப்பந்தத்தின் சுதந்திரம், சுயசார்பு மற்றும் பரஸ்பர உதவி போன்ற கொள்கைகளின் அடிப்படையில் இரு நாடுகளும் உறுதியோடு நின்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவுடன் கைகோர்ப்பது வாய்ப்புகளைத் தழுவுவதற்கும், சீனாவை நம்புவது எதிர்காலத்தை நம்புவதற்கும் சமம் என்று குறிப்பிட்ட அவர், மத்திய கிழக்கு மோதல்களால் உருவான எரிசக்தி நெருக்கடி மற்றும் இயற்கை பேரிடர்களின்போது சீனா இலங்கைக்கு உறுதுணையாக நின்றதை நினைவுகூர்ந்தார்.
மேலும், அரசியல் நிலப்பரப்பு எவ்வாறு மாறினாலும், சர்வதேச சூழ்நிலைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தாலும் சீனா இலங்கையுடன் தோளோடு தோள் நின்று செயற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
புவிசார் பொருளாதார ரீதியாக முக்கியமான உட்கட்டமைப்புத் திட்டங்களில் சீனாவிற்கும் இலங்கைக்குமான கூட்டாண்மை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியன முக்கிய கடல்சார் வணிக மையங்களாக மாறும் நோக்கில் வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களை இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டின் ஒரு பகுதியாகத் தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு, சீனா - -இலங்கை நட்புறவு சிறுநீரக மருத்துவமனை மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான இரண்டாயிரம் வீட்டுத்திட்டங்கள் ஆகியவை பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
அத்துடன் சீனா தொடர்ந்து நான்காவது ஆண்டாக இலங்கை மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், பாசியான் துறவியின் வரலாற்றுப் பயணம் முதல் நவீன பௌத்த மற்றும் சமய உரையாடல்கள் வரை இருநாட்டு மக்களிடையேயான கலாசாரப் பிணைப்பும் மேலும் வலுவடைந்துள்ளது.
சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து எட்டிய முக்கிய உடன்பாடுகள் இருதரப்பு உறவுகளுக்குப் புதிய மூலோபாய வழிகாட்டுதலை வழங்கியுள்ளன.
அடுத்த ஆண்டு சீனா - இலங்கை தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு எழுபது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், புதிய ஆற்றல், பொருளாதாரம், வறுமை ஒழிப்பு, கடல்சார் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் உயர் தரத்திலான “ஒரு பாதை ஒரு மண்டலம்” திட்டங்களை மேலும் விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மையமாகக் கொண்ட சர்வதேச ஒழுங்குமுறையைப் பேணுவதிலும், பிராந்திய அமைதியை உறுதி செய்வதிலும் இரு நாடுகளும் தொடர்ச்சியாக இணைந்து செயற்படும் என்ற புவிசார் செய்தி சர்வதேச சமூகத்திற்குத் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்கும் - சீனத் தூதுவர் ஜி ஷென்ஹொங்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space