இலங்கையின் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் நிதி உள்ளிட்ட ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு 'அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் நீர்' உலகளாவிய கூட்டாண்மை உறுதியளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் நிதியுதவி அளிக்கப்படும் 'அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் நீர்' உலகளாவிய கூட்டாண்மை அமைப்பின் முதன்மை நிறைவேற்று அதிகாரி முயத்வா சிதாலி மற்றும் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி எம்மா பிரிகாம் உள்ளிட்ட தூதுக்குழுவினர், அண்மையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜேமுனி ஆகியோரை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
நாட்டு மக்களின் சுகாதாரம், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குதல் மற்றும் வைத்தியசாலைகளின் சுகாதார வசதிகளைத் தொடர்ச்சியாகப் பேணுதல் போன்ற விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், முக்கிய திட்டங்கள் மற்றும் முன்னுரிமைத் துறைகளுக்கான வளங்களைத் திரட்டுவதில் இந்த உலகளாவிய கூட்டாண்மை வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.
உலகளவில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள், சிவில் சமூகங்கள் மற்றும் ஐ.நா அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் இக்கூட்டாண்மை, இந்தோனேசியா, நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் ஆதரவளித்து வருகிறது. 2010 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்புடன் இணைந்து பயணிக்கும் இலங்கை, 2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான நிலையான இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. இவற்றுக்காக வழங்கப்படும் ஆதரவுகளுக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தூதுக்குழுவினருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 6ஆவது நிலையான வளர்ச்சி இலக்கான "அனைவருக்கும் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்" என்பதை அடைவதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இலங்கையின் சுகாதாரத் துறைக்கு தொழில்நுட்ப, நிதி ஒத்துழைப்பு வழங்க உலகளாவிய கூட்டாண்மை உறுதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space