இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு : தேசிய மின்சக்தி, மின் கட்டணக் கொள்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு
Ad Space
Ad Space
மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டம் 5 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதில் 04 கட்டங்கள் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, அடிப்படை கைமாற்றல் திட்டம், வருடாந்த மின் கொள்முதல் திட்டம், நீண்டகால மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் நீண்டகால மின் பரிமாற்ற அபிவிருத்தித் திட்டம் ஆகிய கட்டங்கள் இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை மறுசீரமைப்புச் செயலணியின் தலைவர் அண்மையில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இதன் இறுதிக் கட்டமான தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், அது இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், மின்சார சபையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் வெளியிடவுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மின்சாரச் சட்டம் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, பெப்ரவரி மாதம் முடிவடைவதற்குள் இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக கலைக்கப்படும் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
Ad Space
Ad Space