உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் வேறொரு பிரதான சூத்திரதாரி இருப்பதாக அரசாங்கம் முன்னெடுக்கும் பிரசாரம் ஆதாரமற்றது என்றும், அமெரிக்காவின் எப்.பி.ஐ. உள்ளிட்ட சர்வதேச விசாரணைப் பிரிவுகள் முஸ்லிம் அடிப்படைவாதக் குழுவினரே தாக்குதலை நடத்தியதாகக் கண்டறிந்துள்ளதாகவும் சுரேஷ் சலே, பிள்ளையான், அசாத் மௌலானா விவகாரங்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியவை என சட்டத்தரணி சஞ்சீவ வீர விக்ரம குற்றம் சாட்டினார்.

பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) பொலன்னறுவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். தற்போது அவர் எனது சேவையைப் பெற்றுக்கொள்ளும் தரப்பினராகவும் உள்ளார். அவரது குடும்பத்தினருடனும் எனக்கு நெருங்கிய தொடர்புள்ளது. நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய அவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகச் சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அமெரிக்காவின் விசாரணை அறிக்கையை நான் நேரடியாகச் சென்று படித்துள்ளேன். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இல்லாத நிலையில், அமெரிக்காவின் எப்.பி.ஐ. விசாரணையாளர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கினார். அதனடிப்படையில் அமெரிக்க விசாரணையாளர்கள் நாட்டுக்கு வந்து தாக்குதல் இடம்பெற்ற இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

குண்டுகள் வெடித்த இடங்களில் காணப்பட்ட சிதைவுகள், வெடிபொருட்களின் எச்சங்கள் ஆகியவற்றைச் சேகரித்து ஆய்வு செய்தனர். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய அமைப்புகள் பயன்படுத்திய வெடிபொருட்களுடனும் ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் அவற்றிலிருந்து வேறுபட்டவை எனக் கண்டறியப்பட்டது. சி-4 உள்ளிட்ட வழக்கமான வெடிபொருட்களுக்குப் பதிலாக, திரவப் பொருளொன்றும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வகையான வெடிபொருள் தொழில்நுட்பம் ஈராக் மற்றும் சிரியாவில் செயற்பட்ட ஐ.எஸ். அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான முஸ்லிம் அடிப்படைவாதக் குழுவினரே தாக்குதலை நடத்தியதாகவும், நவ்பர் மௌலவி உள்ளிட்டோருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன், ஸ்கொட்லாந்து யார்ட் மற்றும் அவுஸ்திரேலியாவும் விசாரணைகளை முன்னெடுத்தன. எந்தவொரு சர்வதேச விசாரணைப் பிரிவும் வேறொரு பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்தவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைத் தாக்குதலுடன் தொடர்புபடுத்துவது அரசியல் நோக்கம் கொண்டது.

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் 12 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராகத் தாக்குதல் தொடர்பில் தெளிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் பிள்ளையான் தொடர்பில் தாக்குதல் சம்பந்தமான நடவடிக்கைகள் தெளிவுபடுத்தப்படவில்லை.

அதேபோன்று அசாத் மௌலானா தொடர்பிலும் அரசாங்கம் உரிய விளக்கங்களை வழங்கவில்லை. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷாணி அபேசிங்கவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் பிள்ளையானின் வாக்குமூலங்கள் தொடர்பிலும் பல கேள்விகள் உள்ளன.

எனவே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வேறொரு பிரதான சூத்திரதாரி இருப்பதாகக் கூறினால் அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தாமல், உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.