இதுவரை தமிழர்கள் யாரும் ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றதில்லை என்ற நிலையே இருந்தது. ஆனால் அந்த சோகம் முடிவுக்கு வந்து, உலகின் பிரமாண்டமான இந்த தொடரில் முதல்முறையாக ஒரு தமிழர் விளையாடியுள்ளது தமிழ் சமூகத்துக்கு பெருமையாக அமைந்துள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்ற நிலையில், அந்த அணியில் தமிழரான நிசான் வேலுப்பிள்ளை (Nishan Velupillay) என்ற தமிழர் இடம்பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் துருக்கி அணியை சந்தித்த நிலையில், அதில் ஆடும் 11 பேர் கொண்ட பட்டியலில் நிசான் வேலுப்பிள்ளை இடம்பெறவில்லை. ஆனால் ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் மாற்று வீரராக நிசான் வேலுப்பிள்ளை உலகக்கோப்பை தொடரில் களமிறங்கினார். இதன் மூலம் கால்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்கும் முதல் தமிழர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
நிசான் வேலுப்பிள்ளையின் தந்தை சசிநாத் வேலுப்பிள்ளை மலேசியாவில் குடியேறிய இலங்கை தமிழராவார். பின்னர் அங்கிருந்து அவர் ஆஸ்திரேலியாவுக்கு குடியேறினார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்த நிசான் வேலுப்பிள்ளை சிறுவயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கியுள்ளார்.
தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு லீக் தொடரில் மெல்போர்ன் விக்டரி (Melbourne Victory FC) கிளப் அணிக்காக விங்கராக விளையாடி சிறப்பாக செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து 2024 அக்டோபரில் சீனாவிற்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சீனியர் அணிக்காக முதன்முதலில் அறிமுகமானார் நிசான் வேலுப்பிள்ளை. அந்த அறிமுகப் போட்டியிலேயே, களம் இறங்கிய வெறும் 7 நிமிடங்களுக்குள் தனது முதல் சர்வதேச கோலை அடித்து அசத்தினார். இந்த நிலையில், நிசான் வேலுப்பிள்ளை ஃபிபா கால்பந்து உலகக்கோப்பையில் களமிறங்கி தமிழர்களுக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
உலகக்கோப்பையில் முதல்முறை வீரராக களமிறங்கிய தமிழர்! வரலாற்று சாதனை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space