எகிப்து தலைநகர் கெய்ரோவின் நெரிசல் மிக்க சுற்றுவட்ட நெடுஞ்சாலையில் நேற்று (25) புதன்கிழமை மாலை எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பழைய நகர மையத்திற்கு வடக்கே உள்ள வர்ராக் சுற்றுவட்ட நெடுஞ்சாலையில் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்குச் சொந்தமான எரிபொருள் தாங்கி வாகனம் சென்று கொண்டிருந்த போது, அதன் முன்னால் உயர்மின்னழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்துள்ளது. 

இதனால் கட்டுப்பாட்டை இழந்த சாரதி, நடுவீதித் தடுப்பைத் தாண்டிச் சென்று வாகனத்தைக் கவிழ்த்ததில், அருகிலிருந்த வாகனங்கள் மீது எரிபொருள் சிதறி பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக 'அல்-அஹ்ராம்' அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்தவர்களுக்குச் சிகிச்சையளிக்க 39 அம்பியூலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக மரபணு மாதிரிகளைப் பெறுமாறு பிராந்திய அரச சட்டத்தரணி உத்தரவிட்டுள்ளார்.

தீ அணைக்கப்பட்டு, எரிந்து நாசமான வாகனங்களின் சிதைவுகள் புல்டோசர் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டதன் பின்னர் குறித்த நெடுஞ்சாலை தற்போது போக்குவரத்திற்காக மீளத் திறக்கப்பட்டுள்ளதாக அரச ஒலிபரப்பு நிறுவனமான என்.எம்.ஏ தெரிவித்துள்ளது.

 கடந்த ஆண்டில் மட்டும் எகிப்தில் வீதி விபத்துக்களால் சுமார் 6,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.