இவ்வருடம் கடந்த மூன்றாம் காலாண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 708 புதிய எச்ஐவி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக அவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 15 - 24 வயதுக்கிடைப்பட்ட 88 பேர் உள்ளடங்குவதாக எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்தின், பால்வினை நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வினு தர்மகுலதிலக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று புதன்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எச்ஐவி என்பது ஒருவரை வைரஸ் தொற்றால் ஏற்படக் கூடிய நிலைமையாகும். நோய்த்தொற்றுக்கு ஆளான ஒருவரிடம் நோய் அறிகுறிகள் வெளிப்பட நீண்டகாலம் தேவைப்படும். உரிய சிகிச்சைகளைப் பெறத் தவறும் பட்சத்தில் காலப்போக்கில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் தீவிரமடைந்து மரணம் சம்பவிக்கும் நிலையே எயிட்ஸ் ஆகும். “எயிட்ஸை ஒழிக்க சிகிச்சை சேவைகளுடன் இணையுங்கள்“ என்ற கருப்பொருளுடன் உலக எயிட்ஸ் தினம் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ளது.

நாட்டில் தற்போது சுமார் 8,700 பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்ந்துவருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் கடந்தவருடம் மாத்திரம் 874 புதிய எச்ஐவி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். உலகளவில் புதிய தொற்று 42 சதவீதம் குறைந்துள்ள நிலையில் இலங்கையில் 48 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வருடம் 3 ஆம் காலாண்டு இறுதிவரையான காலப்பகுதி வரை  708 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பைக் காண முடிகிறது. குறிப்பாக 2026 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட எச்ஐவி தொற்றாளர்களில் 15-24 வயதுக்குட்பட்ட 88 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 19 - 24 வயதுக்குட்பட்ட 78 பேர் இதில் உள்ளடங்குகின்றனர்.

அந்தவகையில் இளம்பருவத்தினரிடையே எச்ஐவி பரவல் அதிகரித்துச் செல்வதைக் காண முடிகிறது. இவ்வாறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் 87 சதவீதமானோர் ஆண்களாவர். கடந்த வருடம் எச்ஐவி தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உட்பட 30 வெளிநாட்டவர்கள் நோய்த்தொற்றுடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்றார்.