அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்காக அடக்குமுறையையும் அச்சுறுத்தல்களையும் கையில் எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளை நசுக்கிவிடலாம் என நினைப்பது அரசாங்கத்தின் அறியாமை. 2029 இல் நாமல் ராஜபக்ஷவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் என ராவணா பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
கொழும்பு மகரகம பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் திங்கட்கிழமை (20) இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பல சவால்களுக்கு மத்தியில் தனது வேட்பாளரைத் தீர்மானிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
கட்சி பெரும் சரிவைச் சந்திக்கும் என்ற சூழல் நிலவியபோதிலும், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கட்சிக்குத் தலைமை தாங்க முன்வந்தார். தோல்வி அடைவோம் எனத் தெரிந்திருந்தும், வீழ்ச்சியடையும் கட்சியைக் காப்பாற்றும் நோக்கில் அவர் தைரியமாகப் போட்டியிட்டார்.
அவ்வாறு கட்டியெழுப்பப்பட்ட எமது கட்சி, வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவை நிச்சயமாக நாட்டின் ஜனாதிபதியாக அரியணையில்ற்றும்.
இதற்கான தயாரிப்புகளும், மக்கள் எழுச்சியும் தற்போதே ஆரம்பமாகிவிட்டன. எமது நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகரகம பௌத்த பூமி, எப்போதும் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக உறுதியுடன் நின்றுள்ளது.
தற்போதைய அரசாங்கத்துக்கு எந்தவிதமான தெளிவான தொலைநோக்குப் பார்வையும் கிடையாது. நாட்டைச் சரியாகக் கொண்டுசெல்லும் அனுபவமிக்க நபர்கள் அவர்களிடம் இல்லை. சிறைச்சாலைகளின் கொள்ளளவை விட அதிகமானோரை அடைத்து வைத்து, அங்கு நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணங்களை வழங்க முடியாது, அவர்கள் கூடாரங்களில் தவிக்கும் அவல நிலையே நீடிக்கிறது.
அரசாங்கத்தின் பொய்ப்பிரச்சாரங்களுக்கும், ஊடகங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கும் மக்கள் ஏமாறப்போவதில்லை. பௌத்த சாசனத்துக்கும், நாட்டின் கலாச்சாரத்துக்கும் எதிரான செயற்பாடுகளை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், வன்முறையற்ற முறையில் ஜனநாயக வழியில் 2029 தேர்தலில் இந்த அரசாங்கத்தைத் தோற்கடிப்போம்.
எதிர்க்கட்சிகளைச் சுக்குநூறாக்குவோம் என அரசாங்கத்தின் தரப்பிலிருந்து வெளியாகும் அச்சுறுத்தல்களுக்கு நாம் பயப்படப் போவதில்லை. அனைத்துக் கட்சிகளும், மக்களும் ஒன்றாக இணைந்து ஒரு பலமிக்க சக்தியாகத் திரண்டு, 2029ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சிபீடமேற்றுவோம் என்றார்.
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முடியாது ; 2029 இல் நாமல் ராஜபக்ஷவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space