முன்னதாக அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் காலதாமதம் செய்யும் தந்திரத்தைக் கையாண்டு அமெரிக்காவைப் பார்த்துச் சிரித்து வருவதாகவும், இனி அவர்கள் அப்படிச் சிரிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ஒபாமா ஈரானுக்குப் புதிய வாழ்வாதாரத்தை வழங்கியதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், தற்போது நிலைமை மாறிவிட்டதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஈரானின் பதிலில் சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு ஈரான் எண்ணெய் விற்பனை மீதான தடைகளை நீக்கி, கடற்படை முற்றுகையைத் தளர்த்த வேண்டும் ஆகிய நிபந்தனைகள் அதில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
ஈரானின் இந்த ஒட்டுமொத்த பதில் திருப்திகரமாக இல்லை எனக் கருதும் ட்ரம்ப், தனது 'வால் ஆஃப் ஸ்டீல்' என அழைக்கப்படும் கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதார அழுத்தத்தைத் தொடரப்போவதாக தெரிகிறது.