பிரபல சுற்றுலாத் தலமான எல்ல நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக வெள்ளவாய பிரதேசத்துக்கு எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (12) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எல்ல நகரில் குப்பைகளைச் சேகரித்து அகற்றுவதில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், சுற்றுலா அமைச்சு, எல்ல பிரதேச சபை மற்றும் இலங்கை இராணுவத்தின் தியத்தலாவ முகாம் ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இதற்கமைய, எல்ல பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வெள்ளவாய பிரதேசத்துக்கு எடுத்துச் சென்று, முறையான வகையில் மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வைப் பார்வையிடுவதற்காக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் எல்ல பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விஜயம் செய்தனர்.
எல்ல நகருக்கு நாளாந்தம் பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், நகரில் குப்பைகள் குவிவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அத்துடன், சுற்றுச்சூழல் மாசடையும் அபாயமும் காணப்படுகிறது.
எனவே, குப்பைகளை முறையாக அகற்றி மறுசுழற்சி செய்வதன் மூலம் எல்ல நகரின் தூய்மையைப் பேணுவதுடன், சுற்றுச்சூழல் மாசடைவதைக் குறைத்து, சுற்றுலாத்துறைக்கு உகந்த சூழலைப் பாதுகாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.



